திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஐந்தாம் திருமுறை |
5.96 மனத்தொகை - திருக்குறுந்தொகை |
பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம்
மின்னுள் ளத்திரள் வெண்பிறை யாயிறை
நின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல்
என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே.
|
1 |
முக்க ணும்முடை யாய்முனி கள்பலர்
தொக்கெ ணுங்கழ லாயொரு தோலினோ
டக்க ணும்மரை யாயரு ளேய்தலா
தெக்க ணும்மிலன் எந்தை பிரானிரே.
|
2 |
பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை
முனியாய் நீயுல கம்முழு தாளினுந்
தனியாய் நீசரண் நீசல மேபெரி
தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே.
|
3 |
மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக்
குறையு மாயினை கோளர வொடொரு
பிறையுஞ் சூடினை யென்பத லாற்பிறி
திறையுஞ் சொல்லிலை எந்தை பிரானிரே.
|
4 |
பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதள்
ஆர்த்தா யாடர வோடன லாடிய
கூத்தா நின்குறை யார்கழ லேயல
தேத்தா நாவெனக் கெந்தை பிரானிரே.
|
5 |
பைம்மா லும்மர வாபர மாபசு
மைம்மால் கண்ணியோ டேறும்மைந் தாவெனும்
அம்மா லல்லது மற்றடி நாயினேற்
கெம்மா லும்மிலன் எந்தை பிரானிரே.
|
6 |
வெப்பத் தின்மன மாசு விளக்கிய
செப்பத் தாற்சிவ னென்பவர் தீவினை
ஒப்பத் தீர்த்திடும் ஒண்கழ லாற்கல்ல
தெப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே.
|
7 |
திகழுஞ் சூழ்சுடர் வானொடு வைகலும்
நிகழு மொண்பொரு ளாயின நீதியென்
புகழு மாறு மலானுன பொன்னடி
இகழு மாறிலன் எந்தை பிரானிரே.
|
8 |
கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை
எப்பற் றியறி தற்கரி யாயருள்
அப்பற் றல்லது மற்றடி நாயினேன்
எப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே.
|
9 |
எந்தை யெம்பிரான் என்றவர் மேல்மனம்
எந்தை யெம்பிரான் என்றிறைஞ் சித்தொழு
தெந்தை யெம்பிரான் என்றடி யேத்துவார்
எந்தை யெம்பிரான் என்றடி சேர்வரே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |